Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 28 ஜூலை (ஹி.ச.)
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மின்னணு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக முதல்வர் விஜய் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் திட்டமிட்டபடி ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
குறிப்பாக, பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தற்போது செயலாக்க நிலையில் இருப்பதாகவும், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார். இந்தத் திட்டம் வெகு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, தகுதியான பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என சிலர் தவறான தகவல்களை பரப்ப முயற்சிக்கலாம் என்றும், அதுபோன்ற கருத்துகளால் மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு வாக்குறுதியையும் முதல்வர் நிறைவேற்றுவார் என்றும், தேவையான நேரத்தில் அதற்கான செயல் மூலம் பதிலளிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN