Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)
2024 மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் விதிகளை மீறியதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், விருதுநகர் மேற்கு காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கவும், வழக்கை முழுமையாக ரத்து செய்யவும் கோரி மாணிக்கம் தாகூர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். விவேகானந்தன், தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களில் வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்றும், ஆனால் இந்த வழக்கில் அந்த நடைமுறை பின்பற்றப்படாமல் காவல்துறை தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி இளந்திரையன், மாணிக்கம் தாகூர் மீது பதிவு செய்யப்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதன்மூலம், தேர்தல் விதிமீறல் தொடர்பாக அவர் மீது தொடரப்பட்ட குற்றவியல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ