Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)
சென்னை ஐஐடியில் செயல்பட்டு வரும் எரிசக்தி ஆய்வகம் மற்றும் ஆற்றல் சேமிப்பு அமைப்பை எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
மாநிலத்தின் எரிசக்தித் திட்டங்கள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
சோலார் மின் உற்பத்தி மற்றும் மின்சார சேமிப்பு திறனை அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள் அனைத்தும் பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யப்பட்டு வருவதாகவும், 1,000 மெகாவாட் அளவிலான மின் சேமிப்பு திட்டங்களில் பேட்டரிகளின் நீண்டகால தரம் மிகவும் முக்கியமானது என்றும் கூறினார்.
பேட்டரி மறுசுழற்சிக்காக தனிக் கொள்கை உருவாக்கப்படும் என்றும், அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சோலார் மின் பயன்பாடு பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது குறைவாக இருப்பதற்கு கடந்த கால முறைகேடுகளே காரணம் என குற்றம்சாட்டிய அமைச்சர், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானிய உதவியுடன் வீடுகளில் சோலார் அமைக்க மக்கள் ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்.
இதனை முறைப்படுத்த தனி செயலி உருவாக்கப்படும் என்றும், நிலுவையில் இருந்த 400 விண்ணப்பங்களில் 350 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சோலார் மின் உற்பத்தி மானியத்தில் முறைகேடுகள் நடந்ததாக பல்வேறு நிறுவனங்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளதாகவும், அவை தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேகதாது அணை தொடர்பாக, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என்றும், அணை கட்டுமானத்தைத் தடுக்க தேவையான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
கரூரில் வழங்கப்பட்ட அரசு பணி நியமன ஆணையை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு, சட்ட ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக பேசிய அவர், தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் மக்கள் மாளிகை வழங்கிய வழிகாட்டுதல் ஏற்கத்தக்கதல்ல என்றும் தெரிவித்தார்.
மேலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிப் பாடலுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam