Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 ஜூலை (ஹி.ச.)
நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறையில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது.
விசாரணையின்போது, மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், டெல்லி மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதுதொடர்பான வீடியோக்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மேலும், மாணவர்கள் மீது மின்சார ஷாக் கருவி, ஆணி பொருத்தப்பட்ட கம்புகள், கண்ணீர் புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
பெல்லட் குண்டு தாக்குதலில் ஒரு சிறுவன் பார்வை இழந்ததாகவும், அதற்கான புகைப்பட ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
போராட்டத்தை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட போலீசாரின் சீருடைகளில் பெயர்கள் நீக்கப்பட்டிருந்ததாகவும், போலீசார் அல்லாத நபர்களும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் மனுதாரர்கள் தரப்பு குற்றம்சாட்டியது.
இதையடுத்து, நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது என்னென்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், டெல்லி, பிகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் அசாம் மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், போராட்டம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அத்துடன், மாணவர்கள் மீது தற்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்ததுடன், கிரிமினல் குற்றப்பின்னணி இல்லாமல் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P