பாம்பன் பழைய தூக்கு பாலம் முழுமையாக அகற்றம் - நினைவுச்சின்னமாக பாதுகாக்க சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தல்
ராமநாதபுரம், 28 ஜூலை (ஹி.ச.) இந்தியாவின் பொறியியல் அடையாளமாக விளங்கிய 111 ஆண்டுகள் பழமையான பாம்பன் பழைய ரயில் இரும்புத் தூக்கு பாலத்தின் மையப் பகுதியான ஷெர்சர் தூக்குப் பாலம் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. மண்டபத்தையும் பாம்பனையும் இணைக்கும் க
பாம்பன் பழைய தூக்கு பாலம் முழுமையாக அகற்றம் - நினைவுச்சின்னமாக பாதுகாக்க சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தல்


ராமநாதபுரம், 28 ஜூலை (ஹி.ச.)

இந்தியாவின் பொறியியல் அடையாளமாக விளங்கிய 111 ஆண்டுகள் பழமையான பாம்பன் பழைய ரயில் இரும்புத் தூக்கு பாலத்தின் மையப் பகுதியான ஷெர்சர் தூக்குப் பாலம் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது.

மண்டபத்தையும் பாம்பனையும் இணைக்கும் கடலின் மீது 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் சுமார் 2.05 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட இந்த பாலம், இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையை பெற்றது. கப்பல்கள் செல்வதற்காக நடுவில் உள்ள 225 அடி நீளமுள்ள தூக்குப் பாலம் மேலே திறந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இது இந்திய ரயில்வேயில் இருந்த ஒரே ஷெர்சர் வகை பாலமாகும்.

கடல் உப்புக் காற்றால் பாலம் கடுமையாக அரிப்புக்கு உள்ளானதாலும், புதிய செங்குத்து தூக்கு பாலம் கட்டப்பட்டதாலும், பழைய பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி புதிய பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் திறந்து வைக்கப்பட்ட பிறகு, பழைய பாலத்தின் பயன்பாடு முழுமையாக நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) நிறுவனம் சுமார் ரூ.2.81 கோடி மதிப்பில் டெண்டர் விட்டு பழைய பாலத்தை அகற்றும் பணியை தொடங்கியது.

கடந்த பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கிய இப்பணியில், ராட்சத கிரேன்கள் மற்றும் கேஸ் வெல்டிங் இயந்திரங்கள் மூலம் தூக்குப் பாலத்தின் இரும்பு பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி அகற்றப்பட்டன.

தற்போது மையத் தூக்குப் பகுதி முழுவதும் அகற்றப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நூற்றாண்டு கடந்த இந்த வரலாற்றுச் சின்னத்தை முற்றிலுமாக உடைத்து இரும்பாக விற்பனை செய்யாமல், அகற்றப்பட்ட தூக்குப் பால பகுதிகளை பாம்பன் அல்லது ராமேஸ்வரம் பகுதியில் நினைவுச் சின்னமாக நிறுவ வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும், ரயில் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆங்கிலேயர் கால பொறியியல் அதிசயத்தை எதிர்கால தலைமுறையினர் காணும் வகையில் பாதுகாக்க வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

Hindusthan Samachar / vidya.b