பழனி கோயில் நில மோசடி வழக்கு - 2வது நாளாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி விசாரணை
திண்டுக்கல், 28 ஜூலை (ஹி.ச.) பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான நில மோசடி வழக்கில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் இன்று (28.07.2026) 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி அடிவாரம் சந்நிதி வீதியில
சிபிசிஐடி


திண்டுக்கல், 28 ஜூலை (ஹி.ச.)

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான நில மோசடி வழக்கில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் இன்று (28.07.2026) 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்தின் நில மோசடி தொடர்பாக, கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச. முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி அறக்கட்டளை பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தமிழக அரசின் உத்தரவின்பேரில், கடந்த 15.07.2026 அன்று இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தென்மண்டல சிபிசிஐடி எஸ்.பி. ஷாஜிதாவும் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கோயில் செயல் அலுவலர் கணபதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.

வழக்கு தொடர்பாக கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வுபெற்ற வட்டாட்சியர் மாரியப்பன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னச்சாமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசன் ஆகியோரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு, 1880-ஆம் ஆண்டு முதல் உள்ள ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும், நிலத்தின் பல்வேறு காலகட்ட வகைப்பாடு தொடர்பான வருவாய்த் துறை ஆவணங்களும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலத்தில் இயங்கிய கடைகளுக்கு எந்த ஆவணங்களின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பது தொடர்பாக மின்வாரியத்திற்கும் சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி, பெறப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், அதன் அடிப்படையில் அவர் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சுமார் 7 மணி நேரம் சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணைக்கு ஆஜரானார்.

இந்நிலையில், 2வது நாளாக திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான ஜஸ்டின் மணிகண்டனிடம், தென்மண்டல சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ஷாஜிதா தலைமையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam