Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 28 ஜூலை (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மூலைக்கரைப்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் இருவருக்கு இடையே ஒரே குடிநீர் குழாயில் தண்ணீர் குடிப்பதில் ஏற்பட்ட சிறு வாக்குவாதம், சாதிய ரீதியிலான தாக்குதலாக மாறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நேற்று பள்ளி வளாகத்தில் இடைவேளையின் போது இரண்டு மாணவர்களும் ஒரே குடிநீர் குழாயில் தண்ணீர் குடிக்கச் சென்றுள்ளனர். அப்போது முன்னுரிமை தொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு மாணவர் மற்றொரு மாணவரை சாதிய பெயரை சொல்லி இழிவுபடுத்தி, அருகில் கிடந்த கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர், வலியால் துடித்துள்ளார். தாக்குதல் நடத்திய மாணவர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
காயமடைந்த மாணவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர். இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
படுகாயமடைந்த மாணவன் மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தங்கள் மகனை சாதிய பெயரை சொல்லி அவமதித்து, கொலை செய்யும் நோக்கில் கட்டையால் தாக்கியதாக அவர்கள் புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். தலைமறைவாக இருந்த மாணவரை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர் 18 வயதிற்கு உட்பட்டவர் என்பதால், சிறார் நீதிமன்ற நடைமுறைகளின் படி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த மாணவரை திருநெல்வேலியில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b