விழுப்புரம் அருகே தொடர் வாகன விபத்து - 2 பேர் உயிரிழப்பு, 3 பேர் படுகாயம்
விழுப்புரம், 28 ஜூலை (ஹி.ச.) சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகேயுள்ள ஐயூர் அகரம் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம், அரசுப் பேருந்து, கார் மற்றும் வேன் ஆகிய வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்
விழுப்புரம் அருகே தொடர் வாகன விபத்து - 2 பேர் உயிரிழப்பு, 3 பேர் படுகாயம்


விழுப்புரம், 28 ஜூலை (ஹி.ச.)

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகேயுள்ள ஐயூர் அகரம் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம், அரசுப் பேருந்து, கார் மற்றும் வேன் ஆகிய வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் விபத்து நேர்ந்துள்ளது.

பாலத்தின் மீது வாகனங்கள் அதிக வேகத்தில் வந்ததும், முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றதுமே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேம்பாலத்தில் முன்னால் சென்ற லாரியை இருசக்கர வாகன ஓட்டி முந்திச் செல்ல முயன்றுள்ளார்.

எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.

அந்த சமயத்தில் பின்னால் வந்த சொகுசு பேருந்து , சாலையில் விழுந்தவர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்தார்.

இருப்பினும் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, பேருந்து திடீரென பிரேக் பிடித்ததால், அதன் பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக பேருந்தின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜான் அன்பழகன் என்பவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த நபர் மற்றும் காரில் இருந்த 2 பேர் என மொத்தம் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தினால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர்.

பலியான இருசக்கர வாகன ஓட்டி யார் என்பது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Hindusthan Samachar / vidya.b