சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் - சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்
இராணிப்பேட்டை, 28 ஜூலை (ஹி.ச.) இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அறி
சென்னை பத்திரிக்கையாளர் மன்றம்


இராணிப்பேட்டை, 28 ஜூலை (ஹி.ச.)

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில்,

சோளிங்கரில் ஒரு கடைக்குள் புகுந்து சிலர் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தினமலர் செய்தியாளர் கல்யாணசுந்தரம் மற்றும் தினகரன் செய்தியாளர் அரங்கநாதன் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மற்றும் அவருடன் வந்தவர்கள் செய்தியாளர்களை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் சோளிங்கர் உதவி காவல் ஆய்வாளர் முனீர் பாஷா முன்னிலையிலேயே நடந்ததாகவும், தாக்குதலை தடுக்கவோ, செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொழில்முறை பணியில் ஈடுபட்டிருந்த செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஊடகச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்கள் மீதான நேரடி தாக்குதல் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டமன்ற உறுப்பினர் கபில் உள்ளிட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, பொருத்தமான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், செய்தியாளர்களின் செல்பேசிகள் பறிக்கப்பட்டு, செய்திக் காட்சிகள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், ஆதாரங்களை அழித்தல் மற்றும் செய்தி சேகரிப்பைத் தடுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், காயமடைந்த செய்தியாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இறுதியாக, பத்திரிகையாளர்கள் மீதான வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், ஊடகச் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam