Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 28 ஜூலை (ஹி.ச.)
நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, இளைஞர்களை மையமாக வைத்து புதிய அரசியல் நகர்வை மேற்கொண்டுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க ‘ஜெய் ஜவான் - ஜெய் கிசான்’ என்ற முழக்கத்துடன், நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பையும் வலியுறுத்தும் வகையில் ‘ஜெய் யுவா’ என்ற முழக்கத்தையும் சேர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது 18 வயதில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில், 21 வயதிலேயே சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே ரேவந்த் ரெட்டியின் முக்கிய கோரிக்கையாகும்.
இளைஞர்கள் தங்களது பிரச்சினைகளுக்காக போராடுபவர்களாக மட்டும் இல்லாமல், அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அதிகாரம் கொண்டவர்களாகவும் மாற வேண்டும் என்பதே இந்த கோரிக்கையின் நோக்கம் என்று கூறப்படுகிறது.
நீட் தேர்வு விவகாரத்தால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை அரசியல் மாற்றத்துக்கான சக்தியாக மாற்றும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
இளைஞர்களின் எதிர்காலம், வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட பிரச்சினைகளில் அவர்களுக்கு நேரடி பங்களிப்பு கிடைக்க வேண்டும் என்ற கருத்தை ரேவந்த் ரெட்டி முன்வைத்துள்ளார்.
‘ஜெய் யுவா’ என்ற முழக்கத்தின் மூலம், இளைஞர்களுக்கு ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கு இணையான இடம் வழங்கப்பட வேண்டும் என்ற செய்தியை அவர் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், இன்றைய தலைமுறை இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கு அரசியலில் வாய்ப்பு அளிக்கும் கட்சியாக காங்கிரசை முன்னிறுத்தும் முயற்சியாகவும் இது கருதப்படுகிறது.
21 வயதில் தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பை குறைக்க அரசியலமைப்பில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இது மத்திய அரசின் முடிவுக்கு உட்பட்டது. இதற்காக தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் ஆதரவை பெறவும், தேசிய அளவில் தனது அரசியல் செல்வாக்கை அதிகரிக்கவும் ரேவந்த் ரெட்டி இந்த விவகாரத்தை முன்னெடுத்து வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
ரேவந்த் ரெட்டியின் இந்த ‘இளைஞர் அஸ்திரம்’ அரசியல் களத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வருகிற நாட்களில் தெரியவரும்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA