Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர் 28 ஜூலை (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரக்கோணம் புறவழிச்சாலை வளைவுப் பகுதியில் உள்ள டீக்கடையில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞரிடம் பணம் மற்றும் செல்போன் கேட்டு மிரட்டி, மறுத்ததால் கத்தியால் தாக்கிய சம்பவத்தில் 19 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு டீக்கடையில் வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, முகத்தை துணியால் மூடிக்கொண்டு வந்த இளைஞர் ஒருவர், அவர்களில் ஒருவரிடம் பணமும் செல்போனும் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
அந்த இளைஞர் மறுத்ததால் ஆத்திரமடைந்த மர்மநபர், கடையில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வடமாநில இளைஞரின் தலையில் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடி உயிர் பிழைத்தார்.
இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சோளிங்கர் அருகே அரியூரைச் சேர்ந்த வெங்கடேசனின் மகன் புருஷோத்தமன் (19) என்பவர் சம்பவத்தில் தொடர்புடையவர் என கண்டறியப்பட்டது.
இதையடுத்து புருஷோத்தமனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam