Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)
சென்னை வேளச்சேரியில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படும் புகாரின் பேரில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றி வந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் தரப்பில் கிடைத்த தகவலின்படி, ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் மணிமாறன், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிற்காக சென்னை வேளச்சேரி வந்திருந்தார். அப்போது உறவினருடன் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
பின்னர், இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வேளச்சேரி ஒரண்டியம்மன் கோவில் தெருவில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணிடம் ஆய்வாளர் மணிமாறன் அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல் அதிகாரி மீதே இத்தகைய குற்றச்சாட்டு எழுந்து, கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P