மாணவர் சேர்க்கை முறைகேடு - பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியருக்கு தலா 4 ஆண்டு சிறை
ராணிப்பேட்டை, 28 ஜூலை (ஹி.ச.) ராணிப்பேட்டையில் வி.ஆர்.வி. அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்தச்
VRV School


ராணிப்பேட்டை, 28 ஜூலை (ஹி.ச.)

ராணிப்பேட்டையில் வி.ஆர்.வி. அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அந்தச் சோதனையில், பள்ளியில் உண்மையில் 187 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வந்த நிலையில், 259 மாணவர்கள் கல்வி பயில்வதாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த முறைகேட்டின் மூலம் தேவைக்கு அதிகமாக 6 ஆசிரியர் பணியிடங்கள் பெற்று, அவர்களுக்கான அரசு ஊதியம் மற்றும் மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்ட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அரசு சலுகைகள் முறைகேடாக பெறப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதன் காரணமாக அரசுக்கு ஊதியமாக ரூ. 4,67,121 மற்றும் மதிய உணவுத் திட்ட ஒதுக்கீட்டில் ரூ. 2,762 என மொத்தம் ரூ. 4,69,883 நிதி இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக பள்ளி தாளாளர் கருணாகர சஞ்சீவி தாஸ், பள்ளி தலைமை ஆசிரியர் ஆலிஸ் தபிதா விஜயகுமாரி மற்றும் அப்போதைய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பூங்கோதை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ராணிப்பேட்டை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்று

(ஜூலை 28) தீர்ப்பளித்த நீதிபதி தேன்மொழி, பள்ளி தாளாளர் கருணாகர சஞ்சீவி தாஸ் என்பவருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.35,000 அபராதம் விதித்தார்.

அதேபோல், பள்ளி தலைமை ஆசிரியர் ஆலிஸ் தபிதா விஜயகுமாரி என்பவருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.40,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பூங்கோதை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவரை நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

Hindusthan Samachar / ANANDHAN