ஆளுநரின் செயல்பாடு தமிழ்நாட்டின் பண்பாட்டு உரிமைக்கு எதிரானது - வேல்முருகன் குற்றச்சாட்டு
சென்னை, 28 ஜூலை (ஹி.ச) தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரைத் தாங்கும் பல்கலைக்கழகத்திலேயே, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்கு தள்ள முயற்சிப்பது வெறும் நிகழ்ச்சி நிரல் மாற்றம் அல்ல,தமிழர் இனத்தின் மொழி அடையாளம் மற்றும் த
Velmurugan


Un


சென்னை, 28 ஜூலை (ஹி.ச)

தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரைத் தாங்கும் பல்கலைக்கழகத்திலேயே, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்கு தள்ள முயற்சிப்பது வெறும் நிகழ்ச்சி நிரல் மாற்றம் அல்ல,தமிழர் இனத்தின் மொழி அடையாளம் மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் உரிமை மீதான ஆதிக்க அரசியல் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் தெளிவாக உள்ள நிலையில், அதை புறக்கணித்து ஆளுநர் மாளிகையின் விருப்பத்தை திணிக்க முயல்வது தமிழ்நாட்டின் பண்பாட்டு உரிமைகளை அவமதிக்கும் செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புக்குள் செயல்பட வேண்டிய ஆளுநர், மாநிலத்தின் அடையாளங்களை நிர்ணயிக்கும் நிலைக்கு தம்மை உயர்த்திக் கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் ஆளுநர் மாளிகையின் கட்டளை மையங்கள் அல்ல என்றும், தமிழின் பெருமையையும் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியையும் காக்க வேண்டிய துணைவேந்தர், அதிகாரத்திற்கு அடிபணிந்து தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை விட்டுக்கொடுப்பது அவரது பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்ததல்ல என்றும் தி.வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது ஒரு பாடல் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் அடையாளமும் உரிமையுமாகும். அதற்கு முதல் மரியாதை வழங்கப்படுவது சடங்கு அல்ல, அது தமிழ்நாட்டின் உரிமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உட்பட தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு சார்ந்த நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்பட வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு மாற்ற முடியாத கொள்கை முடிவாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும், எந்த அரசியல் அழுத்தத்திற்காகவும் தமிழ்த்தாயின் மரியாதையில் சமரசம் செய்யக்கூடாது என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ