Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 29 ஜூலை (ஹி.ச.)
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை முந்திச் செல்ல பிக்கப் வேன் ஓட்டுநர் முயன்றுள்ளார்.
அப்போது எதிரே வேகமாக வந்த லாரி மீது பிக்கப் வேன் நேருக்கு நேர் மோதியது. இந்த பலத்த மோதலில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அருகில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பக்கவாட்டில் பலமாக உரசிச் சென்றது.
இதில் லாரியின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
லாரி பேருந்தின் மீது உரசிய வேகத்தில் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடிகள் அனைத்தும் சுக்குநூறாக உடைந்து சிதறின.
இதனால் பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கண்ணாடி சிதறல்களால் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த மேச்சேரி போலீசார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் மற்றும் ஓமலூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b