ஹைதராபாத்–திருப்பதி விமான கட்டணம் ரூ.24 ஆயிரம் வரை உயர்வு
திருப்பதி , 29 ஜூலை (ஹி.ச.) ஹைதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் விமானங்களின் கட்டணம் தாறுமாறாக உயர்ந்து வருவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே நீடிக்கும் இந்த விமானப் பயணத்துக்கு சில ந
A


திருப்பதி , 29 ஜூலை (ஹி.ச.)

ஹைதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் விமானங்களின் கட்டணம் தாறுமாறாக உயர்ந்து வருவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே நீடிக்கும் இந்த விமானப் பயணத்துக்கு சில நேரங்களில் ரூ.24 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஹைதராபாத்–திருப்பதி வழித்தடத்தில் இண்டிகோ, அலையன்ஸ் ஏர், ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் சேவைகளை வழங்கி வருகின்றன.

சாதாரண நாட்களில் இந்த வழித்தடத்தில் விமான டிக்கெட் கட்டணம் ரூ.5,700 முதல் ரூ.13,500 வரை உள்ளது.

ஆனால் கடைசி நேரத்தில் முன்பதிவு செய்யும் போது கட்டணம் மேலும் பல மடங்கு உயர்ந்து விடுகிறது.

ஹைதராபாத்தில் இருந்து டெல்லி, மும்பை போன்ற தொலைதூர நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்டுகள் கிடைக்கும் நிலையில், குறுகிய தூரமான திருப்பதி பயணத்துக்கு அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டண உயர்வுக்கு திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்படும் ஸ்ரீவாணி விஐபி தரிசன டிக்கெட் வசதியும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சார்பில் விமானப் பயணிகளுக்காக திருப்பதி விமான நிலையத்தில் சிறப்பு கவுண்டர் அமைக்கப்பட்டு, தினமும் சுமார் 200 ஸ்ரீவாணி விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விமானத்தில் வரும் பக்தர்கள் போர்டிங் பாஸை காண்பித்து, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

குறிப்பாக, காலை நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்து வரும் விமானங்களில் பயணிப்பவர்களுக்கு இந்த தரிசன டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், அந்த நேர விமானங்களின் கட்டணத்தை விமான நிறுவனங்கள் உயர்த்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையடுத்து, விமான கட்டண உயர்வு குறித்து TTD தலைவர் பி.ஆர். நாயுடு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பக்தர்களின் நம்பிக்கையுடன் தொடர்புடைய விஷயத்தில் விமான நிறுவனங்கள் அதிக வணிக நோக்குடன் செயல்படக் கூடாது என்றும், உடனடியாக கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கட்டணத்தை குறைக்காவிட்டால், திருப்பதி விமான நிலையத்தில் உள்ள ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டரை ரத்து செய்து, அந்த டிக்கெட்டுகளை ஆன்லைன் அல்லது முன்பதிவு முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து திருப்பதி நாடாளுமன்ற உறுப்பினரும், விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவருமான எம். குருமூர்த்தியும் கவலை தெரிவித்துள்ளார்.

விமான கட்டண உயர்வு பக்தர்களுக்கு பெரும் சுமையாக மாறி வருவதாகவும், விமான நிறுவனங்கள் கட்டணத்தை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

TTD மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பை தொடர்ந்து, விமான நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்குமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA