ராயலசீமாவில் ரூ.5,350 கோடியில் டாடா பவர் பசுமை மின் திட்டங்கள்- 800 மெகாவாட் திறனில் சூரிய, காற்றாலை மின் நிலையங்கள் அமைப்பு
அமராவதி , 29 ஜூலை (ஹி.ச.) ராயலசீமாவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக உருவாக்கும் நோக்கில், கர்னூல் மற்றும் அனந்தபுரம் மாவட்டங்களில் ரூ.5,350 கோடி முதலீட்டில் 800 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களை டாடா பவர் ரினியூவேபிள்
A


அமராவதி , 29 ஜூலை (ஹி.ச.)

ராயலசீமாவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக உருவாக்கும் நோக்கில், கர்னூல் மற்றும் அனந்தபுரம் மாவட்டங்களில் ரூ.5,350 கோடி முதலீட்டில் 800 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களை டாடா பவர் ரினியூவேபிள் எனர்ஜி நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

இந்த திட்டங்களுக்கு கர்னூல் மாவட்டம் பட்டிகொண்டாவில் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் அடிக்கல் நாட்டுகிறார்.

திட்டத்தின் ஒரு பகுதியாக, கர்னூல் மாவட்டம் பட்டிகொண்டாவில் 2,700 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,250 கோடி செலவில் 400 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையம் அமைக்கப்படுகிறது.

அதேபோல், அனந்தபுரம் மாவட்டம் கனேகல்லுவில் 760 ஏக்கரில் ரூ.3,500 கோடி முதலீட்டில் 400 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் திட்டம் உருவாக்கப்படுகிறது.

இந்த காற்றாலை திட்டம் சுஸ்லான் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது.

மாநிலத்தில் அமைக்கப்படும் புதிய தொழிற்சாலைகளுக்கு தடையற்ற, தரமான பசுமை மின்சாரத்தை வழங்குவதே இந்த திட்டங்களின் முக்கிய நோக்கமாகும்.

ஆந்திரப் பிரதேச ஒருங்கிணைந்த தூய்மை எரிசக்தி கொள்கை–2024-க்கு ஏற்ப செயல்படுத்தப்படும் இந்த திட்டங்கள், மின்வாரியங்கள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த திட்டங்களின் கட்டுமானப் பணிகளின் போது சுமார் 4 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும், திட்டங்களுக்காக நிலம் வழங்கிய 1,100-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நீண்டகால வருவாய் மற்றும் பொருளாதார பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தேசிய மின் வலையமைப்புக்கு கொண்டு செல்ல தேவையான இடைமாநில மின் பரிமாற்ற (ISTS) இணைப்பும் பெறப்பட்டுள்ளது.

மாநிலத்தின் 160 கிகாவாட் தூய்மை எரிசக்தி உற்பத்தி இலக்கை எட்ட இந்த திட்டங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA