Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 29 ஜூலை (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கர்ணாவூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலுவுக்கு தொடர்புடையதாக கூறப்படும் இந்த மதுபான ஆலையில், காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழுவாக வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆலையின் நிர்வாக அலுவலகம், கணக்குப் பிரிவு, உற்பத்திப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் தீவிரமாக ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோதனையின் நோக்கம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், முறைகேடு புகார் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சோதனை தொடர்பாக ஆலை நிர்வாகம் தரப்பிலும், டி.ஆர். பாலு தரப்பிலும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
சோதனை முடிவில் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b