Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 ஜூலை (ஹி.ச)
தமிழக அரசியல் சூழலில் ஆளுங்கட்சி–எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கைது நடவடிக்கைகள், அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டுகள் மற்றும் சட்டமன்ற அரசியல் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் சபாநாயகர் அப்பாவு, த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
எம்.எல்.ஏ.க்கள் கடத்தல், குதிரைப் பேரம் மற்றும் சோபா அன்பளிப்பு போன்ற குறுக்கு வழிகளின் மூலம் ஆட்சிக்கு வந்ததாக குற்றம்சாட்டிய அவர், தற்போது திமுக நிர்வாகிகளை குறிவைத்து காவல்துறையை பயன்படுத்தி பொய் வழக்குகள் பதிவு செய்து, தொடர் மிரட்டலில் அரசு ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதையும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதையும், GenZ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டி, இது த.வெ.க அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கட்சியினரை பாதுகாத்து வருவதாகவும், குறிப்பாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை பாளையங்கோட்டை சிறையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலினின் செயல், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும், கரூரில் நடிகர் விஜயை பார்க்க வந்த ரசிகர்கள் உயிரிழந்த சம்பவத்தை குறிப்பிட்ட அவர், அப்போது விஜய் அவர்களை கண்டுகொள்ளாமல் சென்னை திரும்பிவிட்டதாக விமர்சித்ததுடன், திமுக எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாது என்றும் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில், த.வெ.க ஆட்சியில் நடைபெற்று வருவதாக கூறப்படும் லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் தமிழக உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து எவ்வாறு சட்டமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை வழங்கி வருவதாகவும், இது அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, மத்திய மற்றும் மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் துணிச்சலை பார்த்தாவது முதலமைச்சர் செயல்பட வேண்டும் என்றும் அப்பாவு தனது எக்ஸ் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ