மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை - கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்
கோவை, 29 ஜூலை (ஹி.ச.) மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின்
Covai Courtallam


கோவை, 29 ஜூலை (ஹி.ச.)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அருவியில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் இன்று (ஜூலை 29) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கனமழையால் அருவியில் அதிக வேகத்தில் தண்ணீர் கொட்டுவதுடன், நீரின் ஓட்டமும் அபாயகரமான நிலையில் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் அருவிப் பகுதிக்குச் செல்லவோ, நீராடவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலம் பகுதிக்கு வருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட இருட்டுப்பள்ளம் வனப்பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றாலம், இயற்கை எழில் மற்றும் அருவிக்காக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். குறிப்பாக வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம்.

தற்போதைய மழை நிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. மழையின் தீவிரம் குறைந்து, நிலைமை சீரான பிறகு சுற்றுலா மையம் மீண்டும் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN