சென்னை அருகே தொடர் மின்வெட்டு - பொதுமக்கள் சாலை மறியல்
சென்னை, 29 ஜூலை (ஹி.ச.) சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். தினமும் இரவு நேரங்களில் பல மணி நேரம் மின்சாரம் தடைபடுவதால் குழந்தைகள்,
சென்னை அருகே தொடர் மின்வெட்டு -  பொதுமக்கள் சாலை மறியல்


சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)

சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

தினமும் இரவு நேரங்களில் பல மணி நேரம் மின்சாரம் தடைபடுவதால் குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் அவதிப்படுவதாகவும், மின்னணு சாதனங்கள் பழுதடைவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகளிடமும், மின்வாரிய அலுவலகத்திலும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நிரந்தர தீர்வும் எட்டப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனுடன், பல மாதங்களாக கிடப்பில் கிடக்கும் ஓ.எம்.ஆர் - இ.சி.ஆர் இணைப்பு சாலை விரிவாக்கப் பணிகளும் பொதுமக்களின் கோபத்திற்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.

சாலை பணிகள் மந்தமாக நடைபெறுவதால் அப்பகுதி முழுவதும் தூசி புழுதியாக காட்சியளிப்பதாகவும், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், அடிக்கடி சிறு சிறு விபத்துகள் நேரிடுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி, கொட்டிவாக்கம் பிரதான சாலையில் இன்று காலை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

மின்வெட்டு பிரச்சினை மற்றும் சாலைப் பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Hindusthan Samachar / vidya.b