Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி குறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா வாத்ரா தெரிவித்ததாகக் கூறப்படும் விமர்சனத்துக்கு தமிழக அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ், தமிழர், தமிழ்நாடு குறித்து பேசும் அரசியல் தலைவர்கள், காமகோடி பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவருக்கு எதிரான விமர்சனத்தை கண்டிக்காமல் மௌனம் காக்கின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீது இதுபோன்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தால், தமிழக அரசியல்வாதிகள் கடுமையாக எதிர்வினையாற்றியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை ஐஐடி இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு பல்வேறு தொழில்நுட்ப ஆலோசனைகளையும், நவீன கண்டுபிடிப்புகளையும் வழங்கி வருவதோடு, தமிழக அரசின் பல்வேறு சிக்கல்களுக்கு தொழில்நுட்பத் தீர்வுகளையும் அளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி வரும் காமகோடி மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டபோதும், அவரின் ஆலோசனைகளை நாடும் அரசியல்வாதிகள் அதைக் கண்டிக்காமல் இருப்பது சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, சாதிய பாகுபாட்டின் வெளிப்பாடாகவும் உள்ளது என்று நாராயணன் திருப்பதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ