Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 29 ஜூலை (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற வாராந்திர கால்நடைச் சந்தையில் இன்று அதிகாலை முதலே விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஆடு, மாடுகளை வாங்கவும் விற்கவும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் குவிந்ததால் சந்தை பரபரப்பாக காணப்பட்டது.
ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடைபெறும் இந்த சந்தைக்கு ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
அதிகாலை முதலே தொடங்கிய விற்பனையில், தரமான கால்நடைகளை வாங்க வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டதால் விற்பனை வேகம் அதிகரித்தது.
கடந்த இரண்டு வாரங்களாக மணப்பாறை கால்நடைச் சந்தையில் வசூல் பணிகளை நகராட்சி நிர்வாகம் நேரடியாக மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக சந்தை நிர்வாகம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இன்று நடைபெற்ற சந்தையில் சில மணி நேரங்களிலேயே ரூ.6 கோடிக்கும் அதிகமான மதிப்பில் ஆடு, மாடுகள் விற்பனையானதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து நல்ல விலை கிடைத்ததால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதே நேரத்தில், விற்பனை அதிகரித்ததால் தீவனம், கால்நடை உபகரணங்கள் மற்றும் தொடர்புடைய சிறு வியாபாரிகளின் வியாபாரமும் கணிசமாக உயர்ந்தது. இதனால் மணப்பாறை கால்நடைச் சந்தை வழக்கத்தை விட அதிக உற்சாகத்துடன் களைகட்டியது.
Hindusthan Samachar / ANANDHAN