Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)
கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த பதில் தமிழகத்தில் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ்பூஷன், நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பில் எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்திருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்தின் 2007-ஆம் ஆண்டு இறுதித் தீர்ப்பும், 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பும், காவிரி படுகை மாநிலங்களை பாதிக்கும் வகையில் எந்தக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்பதை தெளிவாகக் குறிப்பிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு முறையாக பின்பற்றவில்லை என்றும், இந்நிலையில் ரூ.9,000 கோடி மதிப்பில் 67.15 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணையை அமைக்கும் முயற்சியை தமிழ்நாடு எந்த நிலையிலும் ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பகுதியின் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதும், கர்நாடக அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கையாக மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிகளை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கூறப்பட்டவை என்று குற்றம்சாட்டிய அவர், ஆட்சியை இழந்த தி.மு.க. மேகதாது பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், மேகதாது அணைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் குரல் எழுப்பியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக, கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான நிலைப்பாடே தொடர்கிறது என்றும், எனவே மேகதாது பிரச்சினையில் அரசியல் குற்றச்சாட்டுகளைத் தவிர்த்து, தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க மாநில அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அனைத்து கட்சிகளும் துணை நிற்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ