தமிழகத்தின் 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை ஏன் இழந்தோம்? – த.வெ.க. அரசுக்கு மு.க. ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி
சென்னை, 29 ஜூலை (ஹி.ச) தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கு, மாநில அரசின் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவர்களின் எதிர்காலம் குறித்து அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் ம
M K Stalin


Bj


சென்னை, 29 ஜூலை (ஹி.ச)

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கு, மாநில அரசின் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவர்களின் எதிர்காலம் குறித்து அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசு மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்ததாக நினைவுகூர்ந்துள்ள மு.க. ஸ்டாலின், இன்று மருத்துவப் படிப்பில் தமிழ்நாடு தனது இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றுவிட்டதாகக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் தமிழக அரசு கடும் அலட்சியம் காட்டியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுப்பியுள்ள முக்கிய கேள்விகள்:

தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை?

முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தொடக்கம் முதலே அலட்சியம் ஏன் காட்டப்பட்டது?

தமிழகத்திற்கு சாதகமான சட்டநிலை இருந்தும், நீதிமன்றத்தில் வலுவான வாதங்கள் ஏன் முன்வைக்கப்படவில்லை?

அகில இந்திய கலந்தாய்வின் இரண்டாவது சுற்றுக்கு முன்பே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்ட நடவடிக்கையா?

சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?

கடந்த மே 29, 2026-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவின் தற்போதைய நிலை என்ன?

இந்தக் கேள்விகளை பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்களே எழுப்பி வருவதாக குறிப்பிட்டுள்ள மு.க. ஸ்டாலின், இந்த விவகாரத்தால் எதிர்காலத்தில் தமிழக மக்களுக்கு சேவையாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இது இலட்சக்கணக்கான மக்களின் உயிர் மற்றும் மருத்துவ சேவையுடன் தொடர்புடைய மிக முக்கியமான பிரச்சினை என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு அரசு மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உரிய விளக்கத்தை வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ