Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 29 ஜூலை (ஹி.ச.)
சென்னை ஆவடியில் மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததாகவும், அதை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு சுத்தமான மற்றும் சத்தான உணவை வழங்கத் தவறியது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.
மேலும், தேர்தல் காலங்களில் மட்டும் தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்தி, அவர்களுடன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்கும் அரசியல் கட்சிகள், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் நலனில் அக்கறை காட்டுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து, முதல்வர் ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு தூய்மைப் பணியாளர்களிடம் தவெக நிர்வாகிகள் முறையற்ற வகையில் நடந்து கொள்வதாகவும், இதுபோன்ற செயல்களைத் தடுக்க கட்சியினருக்கு அறிவுறுத்துவதுடன், தூய்மைப் பணியாளர்களுக்கு தரமான, சுத்தமான உணவு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam