Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 29 ஜூலை (ஹி.ச.)
மக்களவையில் கல்வித்துறை தொடர்பான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் இல்லாததை கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்தார்.
அப்போது சபாநாயகர்,
இன்றைய விவாதம் கல்வித்துறை தொடர்பானது. இது உள்துறை அமைச்சகம் தொடர்பான விவாதம் அல்ல. எனவே உள்துறை அமைச்சரின் பெயரை ஏன் குறிப்பிடுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, நமது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் மத்திய உள்துறை அமைச்சர் தான். எனவே அவர் இந்த அவையில் இருக்க வேண்டாமா? என்று எதிர்கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திய மாணவர்களுக்கு பல்வேறு விஷயங்களைப் படிக்க ஆர்வம் உள்ளது. ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பு, தங்களது கருத்தியல் சார்ந்த வரலாறுகளை மட்டுமே மாணவர்கள் படிக்க வேண்டும் என்று நினைக்கிறது.
நாட்டின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு பிம்பம். கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களை உருவாக்கவே கல்வி பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.
மேலும், சபாநாயகர் அவர்களே, இந்த நாட்டில் பாஜக உறுப்பினர்கள் மட்டும்தான் பேச வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதை வெளிப்படையாகச் சொல்லுங்கள். நான் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து கொள்கிறேன் என்று ராகுல் காந்தி ஆவேசமாக தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P