ஆம்னி பேருந்து ஓட்டுநரை வழிமறித்து தாக்கிய 5 பேர் -வைரலான வீடியோவால் பரபரப்பு
தஞ்சாவூர், 29 ஜூலை (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தில், பயணிகளுடன் சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஓட்டுநரை, மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த
தாக்குதல்


தஞ்சாவூர், 29 ஜூலை (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தில், பயணிகளுடன் சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஓட்டுநரை, மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பட்டுக்கோட்டை அருகே வெண்டாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார், தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று, கரம்பக்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்தபோது, நீடாமங்கலம் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த சிலர் பேருந்தை வழிமறித்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பின்னர், மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் 5 பேர் கொண்ட கும்பல், ராஜ்குமாரை பேருந்திலிருந்து கீழே இறக்கி சரமாரியாக தாக்கியது. இந்த தாக்குதலில் அவரது தலை, கண் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி, நரிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் நீடாமங்கலத்தைச் சேர்ந்த மதுர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மற்ற தொடர்புடைய நபர்களையும் அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகள் முன்னிலையிலேயே பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் போக்குவரத்து துறையினரும் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam