Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 29 ஜூலை (ஹி.ச.)
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான நிலம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இதே கோரிக்கையுடன் ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு முன் நிலுவையில் உள்ள வழக்குடன் இணைத்து விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழனியைச் சேர்ந்த அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார் தாக்கல் செய்த மனுவில், மடத்திற்கு சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகவும், டோக்கன் வழங்க அனுமதி அளித்த அதிகாரி பதிவு நடைபெற்ற நாளில் விடுப்பில் இருந்ததுடன், அலுவலக உதவியாளரும் பணியில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொடைக்கானல சார்பதிவாளர் ஆவண எண்ணை ஒதுக்கியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளின் பங்கும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டுமெனவும், எனவே வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தபோது, இதே கோரிக்கையுடன் ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குடன் இணைத்து விசாரிக்குமாறு முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த மனுவையும் இரு நீதிபதிகள் அமர்வு முன் நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து பட்டியலிட நீதிபதி விக்டோரியா கௌரி உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam