Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)
கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மீண்டும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. இந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து விரைந்து நடவடிக்கை எடுத்து, இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில்,சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் பெருநகரங்களாக கோயமுத்தூர் மற்றும் மதுரை திகழ்கின்றன என்றும், தொழில், கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய மையங்களாக இந்த இரு நகரங்களும் உருவெடுத்துள்ளதால், மெட்ரோ ரயில் திட்டம் அவசியமாகியுள்ளது என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் சுமார் ரூ.10,740 கோடி மதிப்பில் 39 கி.மீ. தூரத்திற்கு கருமத்தம்பட்டி–வலியம்பாளையம் வழித்தடத்திலும், மதுரையில் ரூ.11,360 கோடி மதிப்பில் திருமங்கலம்–ஒத்தக்கடை இடையே 31.93 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டு, விரிவான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழக அரசிடம் ஏற்கனவே வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோவையில் பாலக்காடு சாலை (உக்கடம்–மதுக்கரை), மேட்டுப்பாளையம் சாலை (உக்கடம்–பிரஸ் காலனி) உள்ளிட்ட மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளையும் இணைத்து மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கோவை மற்றும் மதுரை ஆகிய இரு நகரங்களிலும் சேர்த்து 45 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதுடன், தினசரி தொழில், வணிகம், கல்வி, சுற்றுலா மற்றும் ஆன்மிகப் பயணங்களுக்காக ஏராளமானோர் வருகை தருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என்றும், இதனைத் தீர்க்கும் வகையில்தான் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதாகக் கூறி கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காதது ஏற்க முடியாதது என்றும், அதே அளவிலான அல்லது அதைவிட குறைவான மக்கள்தொகை கொண்ட வடமாநில நகரங்களான இந்தூர், ஆக்ரா, பாட்னா மற்றும் போபால் போன்ற நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2011-க்குப் பிறகு புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில், பழைய தரவுகளை காரணமாகக் காட்டி திட்டத்தை நிராகரிக்கக் கூடாது என்றும், தற்போதைய மக்கள் தொகை மற்றும் நகர வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், இதற்காக தமிழக அரசு உரிய அழுத்தத்தை மத்திய அரசிடம் கொடுக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது எக்ஸ் தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ