Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 29 ஜூலை (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் நபரையும், அதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சிறுமியின் தாயையும் மகளிர் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை தரப்பில் கிடைத்த தகவலின்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மாரியம்மன் கோவில் அருகே கல்லறைத் தெருவைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நந்தினியுடன் ஒன்றாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. நந்தினிக்கு ஏற்கனவே 4 வயது பெண் குழந்தை இருந்துள்ளது.
இந்த நிலையில், ஜெகநாதன் அந்தச் சிறுமியை அடித்து துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது சிறுமியின் அழுகுரல் கேட்ட அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது, குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் குழந்தையின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்த மருத்துவர்கள் சந்தேகமடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு ஜெகநாதனும் நந்தினியும் தலைமறைவாகியதாக கூறப்படுகிறது.
பின்னர், சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
தலைமறைவாக இருந்த ஜெகநாதன் மற்றும் நந்தினி இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமி மீது நிகழ்ந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை, உடல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், இந்தச் சம்பவத்தில் வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam