Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 29 ஜூலை (ஹி.ச.)
தெலங்கானா முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் மத்திய நிலக்கரி துறை மந்திரி கிஷன் ரெட்டியின் செயல்பாடுகளால், மாநிலத்தின் பெருமையாக விளங்கும் சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் தனது இருப்பையே இழக்கும் அபாயத்தில் இருப்பதாக தெலங்கானா ரக்ஷண சேனா தலைவர் கல்வகுண்ட்லா கவிதா குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மணுகூரு பகுதியில் உள்ள பி.கே.ஓ.சி.பி. (PKOCP) நிலக்கரி சுரங்கத் தொகுதியை, ஏலம் விடாமல் நேரடியாக சிங்கரேணி நிறுவனத்துக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணித்து, ஏல நடைமுறையை மேற்கொள்வதன் பின்னணியில் பெரிய சதி இருப்பதாக தெரிகிறது.
சிங்கரேணி நிறுவனம் ஏலத்தில் பங்கேற்கும் என்று அரசு வெளிப்படையாக அறிவித்தாலும், மறைமுகமாக டி.எஸ். ஜென்கோ நிறுவனத்தையும் போட்டியில் களமிறக்க முயற்சிக்கிறது. நிலக்கரி சுரங்கத் தோண்டுதலில் பல ஆண்டுகள் அனுபவமும் திறமையும் கொண்ட சிங்கரேணிக்கு போட்டியாக, எந்த அனுபவமும் இல்லாத டி.எஸ். ஜென்கோவை களமிறக்குவதன் நோக்கம் என்ன என்பதை முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி விளக்க வேண்டும்.
டி.எஸ். ஜென்கோ மூலம் நிலக்கரி சுரங்கத் தொகுதிகளை பெற்றுக்கொண்டு, பின்னர் அனுபவமின்மையை காரணம் காட்டி அவற்றை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் திட்டமே இதன் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் எழுகிறது.
சிங்கரேணி நிறுவனத்தின் வளர்ச்சியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கு உண்மையான அக்கறை இருந்தால், ஏல நடைமுறையை தவிர்த்து நிலக்கரி சுரங்கத் தொகுதிகளை நேரடியாக சிங்கரேணிக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், டி.எஸ். ஜென்கோ நிறுவனத்தை இந்த ஏலப் போட்டியில் இருந்து மாநில அரசு உடனடியாக விலக்க வேண்டும்.
இவ்வாறு கல்வகுண்ட்லா கவிதா கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA