Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 29 ஜூலை (ஹி.ச.)
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களிலும் பல்வேறு
விழாக்கள் நடைபெறுவது வழக்கம், சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் விழா, ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவ விழா, ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை மாதத்தில் உத்தராயன புண்ணிய காலம் என ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் விமர்சையாக நடைபெறும்.
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் பல்வேறு மாவட்ட மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொள்வது வழக்கம்,
இந்நிலையில் நேற்று இரவு 7.34 மணிக்கு தொடங்கிய ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று இரவு 08.54 மணிக்கு நிறைவடையும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை முதல் இரவு விடிய விடிய பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து நமசிவாய மந்திரத்தை ஜெபித்தபடி பௌர்ணமி நிலவு ஒளியில் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர், விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் விடியற்காலை முதல் குவிந்தனர், ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்த நிலையில் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை வழியாக காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் 30 நிமிடம் தாமதமாக திருவண்ணாமலை வந்தடைந்தது.
திருவண்ணாமலை வந்தடைந்த ரயிலில் பௌர்ணமி கிரிவலம் முடித்து ரயில் நிலையத்தில் காத்திருந்த ஏராளமான பயணிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும், முண்டியடித்து கொண்டும் ரயிலில் ஏறினர், பயணிகளை கட்டுப்படுத்தும் விதமாக ரயில்வே போலீசார் நீண்ட நெடுதூரத்திற்கு தடுப்பு கயிறு அமைத்திருந்த வேளையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பக்தர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில்வே போலீசாரின் தடுப்பு கயிறையும் தாண்டி ரயிலில் இடம் பிடிக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது, தொடர்ந்து அனைவரும் ரயிலில் ஏறி தங்கள் ஊருக்கு புறப்பட்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN