தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையிடம் 16 பவுன் நகை பறிப்பு - ட்ரோன் கேமரா மூலம் திருடனை தேடும் போலீசார்
தூத்துக்குடி, 29 ஜூலை (ஹி.ச.) தூத்துக்குடி அருகே மாநகராட்சி பள்ளி கழிப்பறைக்குள் பதுங்கியிருந்த மர்ம நபர், ஆசிரியையிடம் இருந்து 16 பவுன் தங்க நகையை பறித்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடனை பிடிக்க போலீசார் ட்ரோன் கேம
செயின் பறிப்பு


தூத்துக்குடி, 29 ஜூலை (ஹி.ச.)

தூத்துக்குடி அருகே மாநகராட்சி பள்ளி கழிப்பறைக்குள் பதுங்கியிருந்த மர்ம நபர், ஆசிரியையிடம் இருந்து 16 பவுன் தங்க நகையை பறித்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருடனை பிடிக்க போலீசார் ட்ரோன் கேமரா மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சாந்தி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நேற்று மதியம் வகுப்புகள் முடிந்து மதிய உணவு இடைவேளையின் போது அவர் பள்ளி கழிப்பறைக்கு சென்றிருந்தார்.

அப்போது, கழிப்பறைக்குள் பதுங்கியிருந்த மர்ம நபர், ஆசிரியை அணிந்திருந்த சுமார் 16 பவுன் தங்க நகையை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு தப்பியோடினார்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த ஆசிரியை சாந்தி கூச்சலிட்டபடி திருடனை விரட்டிச் சென்றார். ஆனால், அந்த நபர் அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் ஓடியதால் அவரை பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், வாழைத்தோட்டத்தில் பதுங்கியிருக்கும் திருடனை கண்டுபிடிக்க ட்ரோன் கேமரா உதவியுடன் தீவிர தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பட்டப்பகலில் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து ஆசிரியையிடம் 16 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P