திமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் – சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்
சென்னை, 29 ஜூலை (ஹி.ச.) சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நல்லகண்ணு சிலை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு வீரபாண்டியன், அரசியலில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம், நிலைப்பாடுகள் மாறலாம். ஆனால்
வீரபாண்டி


சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நல்லகண்ணு சிலை திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு வீரபாண்டியன்,

அரசியலில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம், நிலைப்பாடுகள் மாறலாம். ஆனால் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை ஜனநாயக சக்திகளாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பார்க்கிறது.

திராவிட இயக்கத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் நீண்டகால கொள்கை உறவு உள்ளது. தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோரை திராவிட இயக்கத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. உலகமே இடதுசாரி சிந்தனை நோக்கி நகர்ந்து வருகிறது. நாம் வாழும் காலத்திலேயே இந்த நாட்டை இடதுசாரி சிந்தனை நோக்கி திருப்பும் அரசியல் போராட்டத்தில் திமுக போன்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயல்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் தயாராக உள்ளது என்றார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வீரபாண்டியன்,

தற்போதைய சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கூட்டணியிலும் இல்லை என்றும், ஜனநாயகத்தையும் மக்களின் நலனையும் பாதுகாக்கும் விவகாரங்களில் அனைத்து ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், எளிய மக்களின் பிரச்சினைகளுக்காக இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன் நான்காவது ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்றார்.

காவிரி நீர் பிரச்சினை குறித்து பேசிய அவர்,

காவிரி என்பது வெறும் நதி அல்ல,தமிழர்களின் பண்பாடு. கர்நாடக அரசு இதில் அரசியல் செய்யாமல், சட்டப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், மருத்துவக் கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என்றும், தனியார் கல்வி மற்றும் தனியார் மருத்துவமனைகள் மீதான அரசின் சார்பை குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் போராட்டங்களுக்கு காவல்துறை உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுப்பது தேர்தல் நேரத்தில் கட்சியின் முடிவாக இருக்கும் என்றும் வீரபாண்டியன் கூறினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P