தமிழ்நாட்டின் கனிம வளங்களை வெளியே கொண்டு செல்ல தளர்வு கூடாது - தமிழக அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை, 29 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகளில் எந்தவித தளர்வும் வழங்கக் கூடாது என்றும், தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் தமிழக மக்களின் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற உறுதி
Velmurugan


Nn


சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகளில் எந்தவித தளர்வும் வழங்கக் கூடாது என்றும், தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் தமிழக மக்களின் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற உறுதியான கொள்கை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழிஞ்சம் துறைமுகம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்காக தமிழ்நாட்டிலிருந்து கல், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்குமாறு கேரள முதலமைச்சர் கோரியிருப்பது, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை மீண்டும் சுரண்ட அனுமதி கோரும் முயற்சியாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கேரள அரசு தனது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் நிலையில், தமிழ்நாட்டின் மலைகள் மற்றும் பாறைகளை வெட்டி தனது வளர்ச்சிக்காக பயன்படுத்த அனுமதி கோருவது நியாயமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

விழிஞ்சம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் பெருநிறுவனங்களின் நிர்வாகத்தில் செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய வேல்முருகன், துறைமுகங்கள், விமான நிலையங்கள், விரைவுச் சாலைகள் என்ற பெயரில் இயற்கை வளங்கள் பெருநிறுவனங்களின் இலாபத்திற்காக வேகமாகச் சுரண்டப்படுகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படும் கற்கள், எம்-சாண்ட், மணல் போன்றவை வெறும் கட்டுமானப் பொருட்கள் அல்ல; அவை தமிழரின் மலைகள், நீராதாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் எதிர்கால வாழ்வுரிமையையே பிரதிபலிப்பவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை மாற்றம் உள்ளிட்ட சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், இயற்கை வளங்களை விற்று வளர்ச்சி என்ற மாயையை உருவாக்காமல் அவற்றைப் பாதுகாப்பதே உண்மையான முன்னேற்றம் என வலியுறுத்திய அவர், தற்போதுள்ள கனிம வளப் போக்குவரத்து கட்டுப்பாடுகளில் எந்தவித தளர்வும் வழங்கக்கூடாது என்றும், தமிழ்நாட்டின் கனிம வளங்கள் தமிழக மக்களின் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற கொள்கையை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ