Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)
தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததுடன், அதுதொடர்பான வழக்கை மீண்டும் விசாரித்து முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும், இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை புதிய துணைவேந்தர் நியமனங்கள் மேற்கொள்ளப்படாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருந்தது.
இதையடுத்து, தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி தொடர்ந்த வழக்கும், தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர் அதிகாரக் குழுவை அமைக்கக் கோரி செங்கல்பட்டைச் சேர்ந்த பாஸ்கர் தாக்கல் செய்த மனுவும், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் போது,
மனுதாரர் தரப்பில், மாநிலத்தில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகங்களுக்கு தற்போது துணைவேந்தர்கள் இல்லாததால் கல்வி தொடர்பான முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நிதி ஒதுக்கீடுகள் பாதிக்கப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகப் பணிகள் முடங்கியுள்ளதாகவும் தெரிவித்து, உடனடி தீர்வு காணுமாறு கோரப்பட்டது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதம் காரணமாக துணைவேந்தர் நியமனங்கள் தாமதமாகியுள்ளதாகக் கூறினார்.
பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், தேடுதல் குழு பரிந்துரைத்த மூன்று பேரின் பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்து நியமிக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.
மேலும், துணைவேந்தர் நியமன அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டத்தின் மீதான தடை ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளதால், அந்தச் சட்டம் தற்போது அமலில் உள்ளதாகவே கருதப்பட வேண்டும் என்றும், அந்தச் சட்டத்தின் அடிப்படையில் செயல்பட தமிழக அரசுக்கு அனுமதி வழங்கினால் மகிழ்ச்சி என்றும் அரசு தரப்பு தெரிவித்தது.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகள் தொடர்பான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P