Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 29 ஜூலை (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பை ஒடுக்க காவல்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான சட்டவிரோத பட்டாசுகள் மற்றும் பட்டாசு தயாரிப்பு மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி, அனுமதியின்றி தகரக் கொட்டகையில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவின்பேரில், கடந்த மூன்று நாட்களாக சிவகாசி, வெம்பக்கோட்டை, ஆலங்குளம், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைகளில், தகரக் கொட்டகைகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான சட்டவிரோத பட்டாசுகள், வெடிமருந்து மூலப்பொருட்கள் மற்றும் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பட்டாசு உற்பத்தி மற்றும் வெடிமருந்து சேமிப்பை முற்றிலும் தடுக்க, மாவட்டம் முழுவதும் இதுபோன்ற அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam