Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 03 ஜூலை (ஹி.ச)
கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வரும் இறால் மீன் ஏற்றுமதி ஆலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சுமார் 2 டன் அம்மோனியா வாயுவை முழுமையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இன்று எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா, அம்மோனியா அகற்றும் பணிகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
கடந்த 21ஆம் தேதி கன்னிகைப்பேரில் உள்ள இறால் மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்து, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 17 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பின்னணியில், ஆலை வளாகத்தில் எஞ்சியுள்ள அம்மோனியா வாயுவை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அம்மோனியா அகற்றும் பணி தொடங்குவதற்கு முன்பாக, இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படும்.
வாயு அகற்றும் போது ஏற்படக்கூடிய அபாயத்தைத் தவிர்க்கும் வகையில், ஆலையைச் சுற்றியுள்ள 500 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் அனைத்து மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு தற்காலிகமாக வெளியேற்றப்படுவார்கள்.
விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து நிபுணர் குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றியே அம்மோனியா வெளியேற்றப்படும்.
பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் கவிதா கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / vidya.b