Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 03 ஜூலை (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 18 தொழிலாளர்கள் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்கள் 2 பேர் உள்பட 4 பேரின் ஜாமீன் மனுவை திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 21-ஆம் தேதி தனியாருக்குச் சொந்தமான கடல் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
இதில் தொழிற்சாலையில் பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். 83 பேர் மஞ்சங்காரணை மற்றும் செங்குன்றம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
மேலும், 20 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். சிகிச்சை முடிந்த 51 பேர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 14 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் ஒடிசா, அசாம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழிற்சாலை உரிமையாளர்களான ஜோசப் மோகன், ஜோசப் ஜெகன், மேலாளர் டேனியல் மற்றும் ஒப்பந்ததாரர் சுரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, 4 பேரும் ஜாமீன் கோரி திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான மாவட்ட அரசு வழக்கறிஞர் உதயகுமார், 18 உயிரிழப்புக்கு காரணமான இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி டாக்டர் ஜூலியட் புஷ்பா, தொழிற்சாலை உரிமையாளர்கள் 2 பேர் உள்பட 4 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam