Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 03 ஜூலை (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் செயல்பட்டு வரும் கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த 74 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
ஆரம்பத்தில் ஒடிசாவைச் சேர்ந்த 11 பேரும், அசாமைச் சேர்ந்த 2 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு சிறுமிகளும் இடம்பெற்றிருந்தனர்.
அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பின்னர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பெண்கள் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அலத்தி மகாராண ஜுவாங்கா என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் சிலர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால், அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P