மேகதாது அணை கட்டப்பட்டால் அரிசி விலை ரூ.300 ஆக உயரும் அபாயம் - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
தமிழ்நாடு, 03 ஜூலை (ஹி.ச.) காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் நான்கு நாள் நடைபயணத்தின் மூன்றாவது நாள் இன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடம் பேசிய அவ
அன்புமணி


தமிழ்நாடு, 03 ஜூலை (ஹி.ச.)

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் நான்கு நாள் நடைபயணத்தின் மூன்றாவது நாள் இன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது.

அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர்,

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர்வரத்து கடுமையாக பாதிக்கப்படும். அதன் விளைவாக விவசாயம் பெரும் பாதிப்பை சந்திக்கும். தற்போது ரூ.30-க்கு கிடைக்கும் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.300 வரை உயரும் அபாயம் உள்ளது. இதை பொதுமக்கள் அனைவரும் உணர வேண்டும் என்றார்.

மேலும், தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் ஒருகாலத்தில் 29 லட்சம் ஏக்கராக இருந்த விவசாய பரப்பு தற்போது 20 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. கர்நாடகத்திலிருந்து நீர்வரத்து மேலும் குறைந்தால் அது 8 லட்சம் ஏக்கராக சுருங்கும் நிலை ஏற்படும். இதனால் கடுமையான அரிசி பற்றாக்குறை உருவாகும் என்று கூறினார்.

2016-ஆம் ஆண்டு ஏற்பட்ட நீர்ப்பற்றாக்குறையின்போது கோயம்புத்தூரில் ஆண்டுக்கு ஒரு லட்சம் டிராக்டர்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அது 40 ஆயிரமாக குறைந்தது. நீர்ப்பற்றாக்குறை என்பது விவசாயத்தை மட்டுமல்ல, தொழில் உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் பிரச்சினை என்ற எண்ணத்தில் மக்கள் ஒதுங்கி நிற்கக் கூடாது என்றும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கர்நாடக மாநில வனவிலங்கு வாரியம் மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும், வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டிய அமைப்பே அதற்கு முரணான முடிவை எடுத்திருப்பது வேதனை அளிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை விரைவாக செயல்படுத்தி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சி மாற்றங்கள் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. நான் இந்த நடைபயணத்தை அரசியலுக்காகவோ, வாக்குகளுக்காகவோ மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலனை பாதுகாக்கவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறேன் என்றார்.

அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை நிறைவேற்றவும், நொய்யல் ஆற்றை பாதுகாக்கவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam