Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூலை (ஹி.ச.)
குமரி அணுக்கனிமச் சுரங்க அரசாணையை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,144 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) நிறுவனத்திற்கு, அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதியை மேலும் ஓராண்டுக்கு தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள இந்த அரசாணை வருத்தத்தை அளிக்கிறது. இது வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல.
கடுமையாக எதிர்க்கப்பட்டு வந்த திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் அரசியல் முடிவாகும்.
இந்த நீட்டிப்பு மூலம் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதிகளைப் பெற்று திட்டத்தை முன்னெடுக்க IREL நிறுவனத்திற்கு அரசு வாய்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் கன்னியாகுமரியின் கடலோரச் சூழல், நிலத்தடி நீர், விவசாயம், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் எதிர்காலம் ஆபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை வழங்கி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, அதற்கு நேர்மாறான பாதையில் செல்ல முயல்வது சரியல்ல.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளை ஏற்பது கூடாது.
பாஜக தலைமையிலான மத்திய அரசு, “முக்கிய மற்றும் அணுக்கனிமங்கள்” என்ற பெயரில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை பலவீனப்படுத்துகிறது. பொதுமக்கள் கருத்துக் கேட்பை கைவிட்டு,
மாநிலங்களின் உரிமைகளையும் கூட்டாட்சிக் கோட்பாட்டையும் புறக்கணித்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கு பாதையை அமைத்து வருகிறது. இது மக்கள் நலனுக்கான வளர்ச்சி அல்ல; கார்ப்பரேட் நலன்களுக்கான வளர்ச்சியாகும்.
எனவே, தழிழ்நாடு அரசு IREL-க்கு நில ஒதுக்கீட்டு அனுமதியை மீண்டும் நீட்டித்திட அரசாணை வெளியிட்டிருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பொதுமக்கள் கருத்துக் கேட்பை மீண்டும் கட்டாயமாக்கி, கடுமையான சுற்றுச்சூழல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
கன்னியாகுமரியின் கடலோரச் சூழல், நிலத்தடி நீர், விவசாயம், மீனவர்கள் மற்றும் எதிர்கால தலைமுறைகளின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும். மத்திய அரசின் கூட்டாட்சிக்கு எதிரான, சுற்றுச்சூழலை அழிக்கும் கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் மக்களின் பொதுச் சொத்தாகும்.
அவை அரசுகளின் அல்லது நிறுவனங்களின் லாபத்திற்காக ஒப்படைக்கப்படக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசிற்கு உறுதியாக தெரிவித்துக்கொள்கிறது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN