Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூலை (ஹி.ச.)
சென்னை டி.பி. சத்திரம் காவல் நிலையத்தில், சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் முத்துக்கிருஷ்ணன்.
இவர் நேற்று (ஜூலை 2) அதிகாலையில் சென்னை மாநகர ஊர் காவல்படையில் பணிபுரிகிற கோகுல், கீத்குமார் ஆகியோருடன் கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையில் அமைந்துள்ள டி.பி. சத்திரம் காவல் உதவி மையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்த முயற்சித்தபோது, அந்த வாகனம் அவர்மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முத்துகிருஷ்ணனுக்கு பின்பக்க தலை, இரண்டு கண்கள் அருகேயும், இடது கால் தொடையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்த சக காவலர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில், கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திய நபர் 18 வயது பூர்த்தியடையாத இளஞ்சிறார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த 15 வயது சிறுவனை கைதுசெய்த போலீசார், அச்சிறுவன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, உடனே வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால், அவர்களின் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை மூன்று தினங்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தது.
மேலும், பிடிக்கப்படும் சிறாருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்றும், பெற்றோருக்கு ரூ. 25,000 அபராதமும், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
அந்த வகையில், சிறுவனை இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும், 18 வயது பூர்த்தியடையாத சிறுவனிடம் வாகனத்தை ஓட்ட கொடுத்த குற்றத்திற்காக வாகனத்தின் உரிமையாளரும், சிறுவனின் தந்தையுமான சென்னை டி.பி சத்திரம் பகுதியைச் சேர்ந்த சந்தீப்குமார் (வயது 48) என்பவரையும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN