Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூலை (ஹி.ச)
சென்னை போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் காவலர்கள் சீருடையில் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சாமூண்டிஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வாக்கி-டாக்கி மூலம் அதிகாரிகளுக்கு அவர் வழங்கிய உத்தரவில், சட்டம்-ஒழுங்கு காவலர்களைவிட பொதுமக்களை அதிகம் சந்திக்கும் வாய்ப்பு போக்குவரத்து காவலர்களுக்கே இருப்பதாக தெரிவித்தார்.
தற்போது பெரும்பாலானோர் செல்போன் மூலம் நல்லது, கெட்டது என அனைத்தையும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதால், காவலர்களின் செயல்பாடுகளில் கூடுதல் கவனம் தேவை என்றும் கூறினார்.
மேலும், கள ஆய்வின்போது சில காவலர்கள் சீருடையை சுத்தமாக அணியாமலும், ஷூக்களை ஒரே மாதிரியாக அணியாமலும் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
பெண் காவலர்கள் நகைகள் அணிவதற்கும் அனுமதி இல்லை எனவும் நினைவூட்டினார்.
இன்று காலை மெரினா லூப் சாலை பகுதியில் சீருடையில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் மீன் கடையில் பொருட்கள் வாங்கியதை பார்த்ததாகக் குறிப்பிட்ட அவர், பணியில் இருந்தாலும், பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியிலிருந்தாலும், சீருடையில் எந்தக் கடையிலும் பொருட்கள் வாங்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
சீருடையில் பணம் கொடுத்து பொருட்கள் வாங்கினாலும், பொதுமக்கள் அதை இலவசமாக வாங்கியதாக தவறாக எண்ணக்கூடும்.
ஒருவரின் தவறான செயலால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், இந்த உத்தரவை அனைத்து காவலர்களிடமும் உதவி கமிஷனர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளின் புகைப்படங்களை வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட வேண்டும் என்றும் சாமூண்டிஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ