முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 03 ஜூலை (ஹி.ச.) கடந்த ஜூன் 20, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், கடுமையான ஆட்சேபனைக்குரிய
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு -  திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு


சென்னை, 03 ஜூலை (ஹி.ச.)

கடந்த ஜூன் 20, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், கடுமையான ஆட்சேபனைக்குரிய வகையிலும் கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, ஆத்தூர் நகரச் செயலாளர் செல்வம் என்பவர் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அவதூறாகப் பேசுதல், அமைதியைக் குலைத்து மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் காவல் துறையினரின் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். பொறுப்பான பதவியில் இருப்பவர் பேச்சில் கட்டுப்பாட்டுடன் இருந்திருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, 1967ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்தை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலும் ஆட்சி செய்திருக்கிறார்கள்.

சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஏன் இதுபோன்ற அவதூறான கருத்துகளை பேச வேண்டும்? என்று கேள்வி எழுப்பி, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் தனது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிமன்றம், முன் ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனால் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b