Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூலை (ஹி.ச.)
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று
(ஜூலை 3) அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
காலை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடனும், பிற்பகல் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடனும் அவர் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்கு சரிவுக்கான காரணங்கள், அமைப்புரீதியான குறைபாடுகள், தேர்தல் கால பணிகள் மற்றும் எதிர்கால வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளின் கருத்துகளை நேரடியாகக் கேட்கும் வகையில் கூட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள், உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டிகளை பலப்படுத்துதல், மாவட்ட வாரியான மக்கள் தொடர்புப் பணிகள், இளைஞர் மற்றும் மகளிர் அணிகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களும் விவாதிக்கப்பட உள்ளன.
அதேநேரத்தில், சமீபகாலமாக சில அதிமுக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகத் தரப்பினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வரும் சூழ்நிலையும் ஆலோசனையில் முக்கிய இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாகிகள் வெளியேறுவதற்கான காரணங்கள், அதனைத் தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட அளவில் கட்சி ஒற்றுமையை வலுப்படுத்துவது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாவட்ட வாரியான ஆலோசனைகள் மூலம் தேர்தல் தோல்வியில் இருந்து பாடம் கற்று, கட்சி அமைப்பை மறுசீரமைத்து, எதிர்கால அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அதிமுக புதிய செயல் திட்டத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இன்று நடைபெறும் கூட்டத்தில் வெளிவரும் முடிவுகள், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P