Enter your Email Address to subscribe to our newsletters

சிவகாசி, 03 ஜூலை (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கோப்பையநாயக்கன்பட்டியில் அதிமுக மேற்கு மாவட்ட துணைச் செயலாளரும், சிவகாசி முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவருமான சுப்பிரமணியனுக்கு சொந்தமான குருலட்சுமி என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 60- க்கும் மேற்பட்ட பட்டாசுத் தயாரிப்பு அறைகள் உள்ளன. இந்த ஆலையில் 100- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வழக்கம்போல் பட்டாசு ஆலையில் நேற்று (ஜூலை 02) பட்டாசு உற்பத்தி நடைபெற்று வந்தது. அப்போது ரசாயன மூலப்பொருட்களில் ஏற்பட்ட உராய்வுக் காரணமாக திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு தயாரிப்பு அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானதுடன், மேலும் 10 அறைகள் சேதமடைந்தன.
இந்த விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜம்மாள் என்ற பெண் தொழிலாளி, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த சக தொழிலாளர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் 90% க்கும் அதிகமான தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜம்மாளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா, உரிமம் சரியாக உள்ளதா என்ற கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் அடிக்கடி நிகழும் இத்தகைய விபத்துகள், பட்டாசு ஆலை தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b