சேலம் ஓமலூர் சந்தையில் ஒரே நாளில் ரூ.6.5 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
சேலம், 03 ஜூலை (ஹி.ச.) சேலம் மாவட்டம் ஓமலூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தையில் வர்த்தகம் இன்று சூடுபிடித்தது. ஒரே நாளில் சுமார் ரூ.6.5 கோடிக்கு கால்நடைகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. தமிழகம் மட்ட
சேலம் ஓமலூர் சந்தையில் ஒரே நாளில் ரூ.6.5 கோடிக்கு கால்நடைகள் விற்பனை


சேலம், 03 ஜூலை (ஹி.ச.)

சேலம் மாவட்டம் ஓமலூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தையில் வர்த்தகம் இன்று சூடுபிடித்தது.

ஒரே நாளில் சுமார் ரூ.6.5 கோடிக்கு கால்நடைகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் கால்நடைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

கறவை மாடுகள், எருதுகள், கன்றுகள், ஆடுகள் என 2,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் சந்தைக்கு வந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதில் முக்கிய அம்சமாக, உயர் ரக நாட்டு மாடு ஒன்று ரூ.1 லட்சத்துக்கு விற்பனையானது.

நல்ல உடல்வாகு, அதிக பால் தரும் தன்மை கொண்ட அந்த மாட்டை வாங்க வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியது.

இறுதியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அதனை ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கிச் சென்றார்.

இவ்வளவு அதிக விலைக்கு நாட்டு மாடு விற்பனையானது வியாபாரிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக மந்தமாக இருந்த கால்நடை வர்த்தகம், ஆடி மாதம் தொடங்குவதையொட்டி தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

விவசாயப் பணிகளுக்கும், பால் உற்பத்திக்கும் தேவையான மாடுகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால் வரும் வாரங்களில் வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என சந்தை நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b