பைக் மீது முறிந்து விழுந்த தென்னை மரம் - முன்னாள் துணை மேயரின் மகன் பரிதாப பலி
மும்பை , 03 ஜூலை (ஹி.ச.) மராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதுடன், மரங்கள் முறிந்து விழும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
A


மும்பை , 03 ஜூலை (ஹி.ச.)

மராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதுடன், மரங்கள் முறிந்து விழும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், தானே மாவட்டம் மீரா-பயந்தர் மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் அசோக்கின் மகன் ராகுல், நேற்று மாலை சதானந்த் நகர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையோரத்தில் நின்றிருந்த தென்னை மரம் திடீரென முறிந்து அவரது பைக் மீது விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த ராகுலை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், வழக்குப்பதிவு செய்து மரம் முறிந்து விழுந்ததற்கான காரணம் குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கனமழையால் மரங்கள் முறிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA